மாநகராட்சி இடத்தில் ஆழ்துளை குழாய் பதித்தவருக்கு நோட்டீஸ்
சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் வீட்டின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை குழாய் பதித்தவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி மிட்டாபுதூர் கான்வென்ட் சாலை பகுதியில் குடியிருந்து வரும் கட்டட உரிமையாளர், மாநகராட்சிக்கு சொந்தமான சாலையின் ஓரத்தில் ஆழ்துளை குழாய் பதிக்கும் பணியை புதன்கிழமை மேற்கொண்டார்.
தனி நபரின் தண்ணீர் தேவைக்காக மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் ஆழ்துளை குழாய் பதிக்கப்படுவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அஸ்தம்பட்டி மண்டல உதவி செயற்பொறியாளர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், நில அளவையரைக் கொண்டு கணக்கெடுக்கப்பட்டது. அதில், தனியாரால் ஆழ்துளை குழாய் பதிக்கும் பகுதி மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆழ்துளை குழாய் பதிப்பதை நிறுத்திவிட்டு பொருள்களை அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு அந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டு சென்றனர்.
ஆனால், அதிகாரிகள் சென்ற பின்னர் மீண்டும் ஆழ்துளை குழாய் பதிக்கும் பணி கட்டட உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அங்கு மீண்டும் சென்ற அதிகாரிகள் கட்டடத்தின் உரிமையாளரிடம் விதிமீறல் தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அளித்தனர்.
இந்நிலையில், தனியாரால் சாலை ஓர நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாயினை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துக் கொள்வதாக மாநகர ஆணையர் எம்.அசோகன் வியாழக்கிழமை அறிவித்தார்.
மேலும், ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிபம்ப் பொறுத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் மா.அசோகன் தெரிவித்தார்.