தினமணி 17.12.2013
மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டடம் அகற்றம்
தினமணி 17.12.2013
மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டடம் அகற்றம்
சென்னை வில்லிவாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினர்.
சென்னை வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சத்துணவுக்கூடம் உள்ளது.
இது மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இந்த இடத்தில் புதிய சத்துணவுக் கூடம் அமைக்கப்பட்டது.
ஆனால் பழைய சத்துணவுக் கூடம் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்த
இடத்தை வில்லிவாக்கம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்
பாரதிபாஸ்கர் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து கட்டடம்
கட்டியதாகத் தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்
கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அப்போது பாரதிபாஸ்கர் நீதிமன்றத்தில்
தடையாணை பெற்றதால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தாற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தடையாணையை நீதிமன்றம் விலக்கிக்
கொண்டது.
இதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்ற
மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புக் கட்டடத்தை ஜே.சி.பி. வாகனம் மூலம்
அகற்றினர்.