தினமணி 19.12.2009
மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசுக்கு பரிந்துரை– ஆணையர்
மதுரை, டிச. 18: மதுரை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று, மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 3}வது செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது:
வணிக நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியைக் குறைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று, புதிய கட்டடங்களுக்கு அதிக வரி விதிப்பதைக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது.
வரியைக் குறைப்பது தொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.
52 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள மாநகராட்சி எல்லையை 117 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரையை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
அடுத்த வாரத்தில் இருந்து மதுரையில் அனைத்து வார்டுகளிலும் தினசரி குடிநீர் விநியோகம் நடைபெற உள்ளது.
குடிநீர் இணைப்புகளை இம்மாதம் 31}ம் தேதிக்குள் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில், பாரம்பரிய நடைபாதை சுற்றுலாத் துறையுடன் இணைந்து அமைக்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக, கூட்டத்தில் சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேல், செயலர் என். ஜெகதீசன் ஆகியோர் சொத்து வரி குறைப்பு, மாநகராட்சி விரிவாக்கம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கோரிக்கை வைத்தனர்.