தினமலர் 28.04.2010
மாநகராட்சி ஏலதாரர்கள் அலைக்கழிப்பு
ஈரோடு: சமீபத்தில் நடந்த கடை ஏலத்தில் பங்கேற்றவர்களுக்கான ஏலத்தொகையை திருப்பி செலுத்தாமல் மாநகராட்சி இழுத்தடித்து வருகிறது. ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே மாநகராட்சி பள்ளி இயங்கி வந்தது. மிகவும் நெருக்கடியான இந்த இடத்திலிருந்து பள்ளியை இடமாற்றிய மாநகராட்சி, அந்த இடத்தில் வணிகவளாகம் கட்ட முடிவு செய்தது. டவுன் பள்ளி இடிக்கப்பட்டு, அங்கு ‘பார்க்கிங்‘ வசதியுடன் 64 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் நிறைந்த மணிக்கூண் அருகே இந்த வணிகவளாகம் அமைந்துள்ளதால், அந்த இடத்தில் கடை பிடிக்க கவுன்சிலர்கள் உள்பட பெரும்பாலானோர் ஆர்வம் காட்டினர்.
ஆளும்கட்சி, எதிர்கட்சி என எந்தப் பாகுபாடுமின்றி சில கவுன்சிலர்கள் ‘சிண்டிகேட்‘ அமைத்து ஏலத்தில் பங்கேற்றனர். ஏலத்தில் கலந்து கொள்ள ஒரு கடைக்கு டெபாஸிட் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். அதிகபட்சமாக மாதம் 30 ஆயிரம் வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டது. ‘ஏலத்தில் பங்கேற்பவர்களுக்கு எந்தவரி பாக்கியும் இருக்கக் கூடாது‘ என்ற விதிப்படி ஏலம் நடந்தது.
கடந்த 22ம் தேதி நடந்த ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ‘டெபாஸிட்‘ தொகை ஒரு லட்சத்துக்கான ‘டிடி‘ கொடுத்தனர். மாநகராட்சி விதிப்படி, ஏலம் முடிந்த சில தினங்களில் அந்த தொகையை கடைகளை ஏலம் எடுக்காதவர்களுக்கு மாநகராட்சி திருப்பி செலுத்த வேண்டும். ஆனால், ஏலம் முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இத்தொகையை திருப்பி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.
‘மாநகராட்சியில் போதிய நிதியில்லாததால் ஒருநாளைக்கு ஐந்து பேருக்கு மட்டுமே ‘டெபாஸிட்’ தொகை திருப்பி வழங்கப்படுகிறது’ என்று ஏலதாரர்கள் புலம்புகின்றனர். கடை கிடைக்கும் என்ற நப்பாசையில் சிறு வியாபரிகள் பலரும் நகை, வீடு, நிலத்தை அடமானம் வைத்து ‘டெபாஸிட்’ கட்டியுள்ளனர். ‘டொபஸிட்’ தொகை வழங்காமல் மாநகராட்சி இழுத்தடிப்பதால் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது’ என்று ஏலதாரர்கள் வருத்தமுடன் கூறினர்.