தினமலர் 30.04.2010
மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை : ‘ஒப்பந்ததாரர் சட்டத்துக்கு புறம்பாக நடக்கக்கூடாது‘
திருச்சி: திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக உள்ள பணிகளுக்கான ஒப்பந்தபுள்ளிகளில் பங்கேற்க முன்வரும் ஒப்பந்தகாரர்கள் ஒப்பந்தபுள்ள படிவங்களை மின்னணு முறையில் மட்டுமே சமர்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தகாரர்கள், ஒப்பந்தப்புள்ளி படிவங்களை நேரில் சமர்பிக்க தேவையில்லை. அதன்படி, திருச்சி மாநகராட்சியில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் இணையதளத்தில் மின்னணு முறையில் ஒப்பந்தபுள்ளகளை ஏற்றம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகை 10 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ள பணிகளுக்கான ஒப்பந்தபுள்ளிகளில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்தகாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் ஸ்கேன் செய்து ஏற்றம் செய்த பின் தொழில்நுட்ப தகுதிக்காக மேற்படி இணையதளத்தில் ஸ்கேன் செய்து ஏற்றம் செய்யப்பட்ட ஆவணங்களுக்கான அசல்களை தபால் மூலமாக ஒப்பந்தபுள்ளி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உரிய கால கெடுவுக்குள் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும். இதற்காக ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. மாநகராட்சி வளாகத்தில் ஒப்பந்தகாரர்கள் நேரில் வந்து சட்டத்துக்கு புறம்பாக நடந்துகொண்டு மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.