தினத்தந்தி 29.04.2013
மாநகராட்சி கமிஷனர் தகவல் மாநகராட்சி பகுதியில் தங்கு தடையின்றி குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை
மாநகராட்சி பகுதியில் குடி தண்ணீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கமிஷனர் நந்தகோபால் கூறினார்.
குடிதண்ணீர்
மதுரையை அடுத்த மணலூரில் மாநகராட்சியின் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது.
அங்குள்ள நீர் உறிஞ்சு கிணறுகள் பழுதடைந்து இருந்தன. அதனை சீரமைத்து
தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.
அங்கிருந்து 4 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகத்தை மேயர் ராஜன் செல்லப்பா நேற்று தொடங்கி வைத்தார்.
அதைதொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் கூறியதாவது:–
மணலூர் நீர் உறிஞ்சு கிணறுகள் சீரமைக்கப்பட்டு தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.
அந்த தண்ணீர் 59 முதல் 62–வது வார்டுகள் வரை 4 வார்டுகளில் வசிக்கும்
பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. அதன்படி 40 முறை
லாரிகள் மூலம் அந்த 4 வார்டுகளில் தினமும் தண்ணீர் வினியோகிக்கப்படும்.
நடவடிக்கை
ஏற்கனவே திருப்பரங்குன்றம், மூலக்கரையில் உள்ள நீரேற்று நிலையத்தில்
இருந்து மண்டலம்–2 விரிவாக்கப்பகுதிகளுக்கு மங்களக்குடி குடிநீர்
திட்டத்தின் மூலம் லாரிகளில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுகிறது.
மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளுக்கு வைகைகூட்டு குடிநீர் திட்டத்தின்
மூலம் சீராக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மீதம் உள்ள 28 வார்டுகளுக்கும் குடிநீர் சீராக வழங்குவதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தங்கு
தடைஇன்றி வழங்க முடியும்.