தினமலர் 20.11.2013
மாநகராட்சி கமிஷனர் பெருமிதம் கழிப்பிட பராமரிப்பில் திருச்சி முன்னோடி
திருச்சி: “”பொது கழிப்பிட பராமரிப்பில் திருச்சி முன்னோடியாக திகழ்கிறது,” என, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறினார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் உலக கழிவறை தின நாள் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு மேயர் ஜெயா தலைமை வகித்தார்.
விழாவுக்கு முன்னிலை வகித்த மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி பேசியதாவது:
ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மாநகராட்சியில் 286 குடிசைப் பகுதிகள் உள்ளன. 4 ஆயிரத்து 643 இருக்கைகள் கொண்ட, 383 பொது கழிப்பிடங்கள் உள்ளன.
இவற்றில், கடந்த 2008ம் ஆண்டு முதல் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் அலைகள் மகளிர் குழு சார்பில் 67, ஸ்கோப் சார்பில் 28, சேவை சார்பில் 42, என மொத்தம் 137 பொது கழிப்பிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சமுதாயம் சார்ந்த கழிப்பிட பராமரிப்பில் திருச்சி மாநகராட்சி முன்னோடியாக உள்ளது.
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, 76 மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கழிப்பிட பயன்பாடு, பராமரிப்பின் அவசியம் குறித்த விழப்புணர்வு துண்டு பிரசுரங்கள், திறந்த வெளி கழிப்பிடங்களை புறக்கணித்தல் குறித்த போஸ்டர்கள் வழங்கப்பட்டு, பள்ளி துவங்கும் முன் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
கிராமாலயா நிறுவனர் தாமோதரன் பேசுகையில், “”மிக சுகாதாரமான நாடாக விளங்கும் சிங்கப்பூரில் தான் முதன்முதலாக 2001ம் ஆண்டு உலக கழிப்பறை தின அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு காலத்தில் திருச்சியில் இருந்து குஜராத், வார்தா போன்ற பகுதிகளுக்கு சென்று கழிப்பிட பராமரிப்பு, அமைத்தல் குறித்து பார்வையிட்டு திரும்பிய நிலை மாறி, தற்போது உலக அளவில் இருந்து திருச்சியில் உள்ள கழிப்பிட வசதிகளை பார்வையிடும் நிலை உருவாகியுள்ளது,” என்றார்.
விழாவில், சிறப்பாக கழிப்பிடங்களை பராமரித்த கிராமாலயா அலைகள் குழுவை சேர்ந்த 12 குழுக்களுக்கு பரிசுகளை மேயர் ஜெயா வழங்கி, கிராமாலயா இணைதளத்தையும் துவக்கி வைத்தார்.
விழாவில், துணை மேயர் ஆசிக் மீரா மற்றும் கோட்டத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.