மாநகராட்சி கவுன்சிலர் செந்தில் அதிமுகவில் இருந்து நீக்கம்
கோவை: கோவை மாநகராட்சி 21வது வார்டு அதிமுக கவுன்சிலரான செந்தில்(38), மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் இருந்து வந்தார். இவரை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் இருந்ததாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கியதாலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செந்தில் நீக்கப்படுகிறார். அவரிடம், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது‘ எனக்கூறியுள்ளார்.
இனி, சுயேட்சை கவுன்சிலர்:
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் அதிமுக 80, திமுக 10, காங்கிரஸ் 3, பாரதிய ஜனதா 2, மதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், தமுமுக, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளில் தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர். மாநகராட்சி வரலாற்றில் சுயேட்சை கவுன்சிலர்கள் இல்லாதது இதுவே முதல்முறை. தற்போது, செந்தில் நீக்கப்பட்டுள்ளதால் இனி இவர் சுயேட்சை கவுன்சிலராக அறிவிக்கப்படுவார்.