தினமலர் 13.04.2010
மாநகராட்சி சாக்கடை பராமரிப்பு கட்டணம் திடீர் உயர்வு மதுரை மக்கள் கடும் அதிர்ச்சி
மதுரை: பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணத்தை மதுரை மாநகராட்சி திடீரென பல மடங்கு உயர்த்தியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1.25 லட்சம் வீடுகள் இருந்தன. 72 வார்டுகளில் அமைந்துள்ள இந்த வீடுகளுக்காக 2002ம் ஆண்டு துவங்கிய பாதாள சாக்கடை பணி, ஒரு வழியாக 90 சதவீத தெருக்களில் முடிந்துள்ளது. விடுபட்ட பகுதிகளில் தற்போது பணிகள் நடக்கின்றன. பணிகள் முடிந்த பகுதிகளில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு தரப்படுகிறது.
இப்பணி தற்போது தான் துவங்கி உள்ளது. இது முடிய இன்னமும் எத்தனை மாதங்கள் ஆகும் என தெரியாது.முழுமையாக பணிகள் முடிந்து, அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு தரப்பட்ட பிறகு, பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணத்தை ஆண்டுக்கு ஆயிரத்து 500 ரூபாய் ஆக நிர்ணயிக்கலாம் என முன் மேயராக ராமச்சந்திரன் இருந்த போது முடிவு செய்யப்பட்டது. அது போல், பணிகள் முடிந்ததும் பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணமாக குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து, ஆண்டுக்கு 100, 375, 525, 600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகையே அதிகம் என மாநகராட்சி கூட்டங்களில் எதிர்க்கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்தன.நிலைமை இப்படி இருக்க, சத்தமே இல்லாமல், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டுஉள்ளது. 1.4.10 முதல் அமலுக்கு வருவதாக இருக்கும் இக்கட்டணத்தின் படி, பகுதிவாரியாக குடியிருப்புகள் வகைப்படுத்தப்படவில்லை. அனைத்து வீடுகளுக்கும் ஆண்டுக்கு 1500 ரூபாய் எனவும், வணிக கட்டடங்களுக்கு ஆண்டுக்கு 3000 ரூபாய் எனவும், தொழிற்சாலைகளுக்கு 4500 ரூபாய் எனவும் பராமரிப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இப்புதிய கட்டணம், கம்ப்யூட்டர்களிலும் பதிவு செய்யப் படுகிறது.
வரும் நிதி ஆண்டில் இப்புதிய விகிதத்தின்படி, பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்.இப்புதிய கட்டணம், அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ‘வரி உயர்வு தொடர்பாக எந்த மாற்றத்தை செய்தாலும் அரசு கெஜட்டில் வெளியிட்ட பிறகு அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டண உயர்வு, கெஜட்டில் வெளியிடப்படுவதற்கு முன் அமல் செய்யப்படுகிறது. இதுவும் தவறு‘ என்று வரும் மாநகராட்சி கூட்டத்தில் பிரச்னையைக் கிளப்ப சில கவுன்சிலர்கள் முடிவு செய்துள்ளனர்.