தினமலர் 31.01.2010
மாநகராட்சி சார்பில் ‘மெகா‘ மருத்துவ முகாம்
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், தனியார் டாக்டர்களின் உதவியுடன் நீரிழிவு நோய்க்கான சிறப்பு, “மெகா‘ மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில், நீரிழிவு நோய்க்கான 30 சிறப்பு, “மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட் டன. திருவல்லிக்கேணி நெடுஞ் சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட மருத் துவ முகாமை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம், சென்னை நகரில் 30 இடங்களில் நடத்தப்படுகிறது. நீரிழிவு நோய் வந்தால் முழுவதும் குணம் அடையாது. அதற்கு முறையான சிகிச்சை மட்டுமே பெற வேண்டும். உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கையாள்வதோடு, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சென்னை நகரில் மூன்று லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சென்னையில் இருக்கும் தனியார் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை அழைத்து, அவர்களின் ஒத்துழைப்புடன் மாநகராட்சி டாக்டர்களும் இணைந்து, மொத்தம் 300 பேர் 30 முகாம்களில் சிகிச்சை அளிக்கின்றனர்.
நீரிழிவு நோய்க்காக தனிப் பட்ட முறையில் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது, இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் தான், இந்த முகாமில் நீரிழிவு நோயை கண்டறிய 12 “செமி ஆட்டோ அனலைசர்‘ மற்றும் 90 “குளுக்கோ மீட்டர்கள்‘ பயன் படுத்தப்பட்டன. இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, இந்த நோயின் கட்டுப்பாடு நிலை தெரியப் படுத்தப்படும். இந்தநோய் கண்டறிந்தவர்களின் இதயம், சிறுநீரகம், கண் கள், பாதங்கள் ஆகியவற்றின் பாதிப்புகளை நிபுணர்களை கொண்டு பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்படும். முறையான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங் கப்படும். சென்னை மாநகராட்சியில் 97 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 74 மகப்பேறு மருத்துவமனைகளும் உள்ளன. இந்த 173 மருத்துவமனைகளிலும், பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை நோயை கண்டறிய, மாநகராட்சி சார்பில், 300 “குளுக்கோ மீட்டர்கள்‘ வாங்கி கொடுக்கப்பட்டுள்ளன. சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகள் மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் தொடர்ந்து மாதம் இருமுறை வழங்கப்படுகிறது. இவ்வாறு மேயர் கூறினார்.
இந்த முகாமில் 16 ஆயிரத்து 700 பேர் கலந்துகொண்டனர். இதில் 3,795 பேர் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன் அறிவுரையும் வழங்கப்பட்டது. 2,568 பேர் புதிதாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு தொடர் சிகிச்சைக் கும் அனுமதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மன்ற ஆளுங் கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.