தினகரன் 15.06.2010
மாநகராட்சி சார்பில் ரத்தவங்கி திறக்கப்படும் மேயர் தகவல்
சென்னை, ஜூன் 15: ரத்த தானம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், குருதி பரிமாற்று குழுமம், மாநகராட்சி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் மற்றும் சென்னை மாவட்ட அரசு ரத்த வங்கிகள் இணைந்து ‘உலக ரத்த கொடையாளர் தினம்‘ நிகழ்ச்சி நடத்தினர். இதை மேயர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது:
தானத்திலேயே சிறந்த தானம் ரத்ததானமாகும். ஒருவர் தன் ரத்தத்தை தானமாக கொடுக்கும்போது ஒருவரது உயிர் காப்பாற்றப்படுகிறது.
ஒரே நேரத்தில் 6 பேர் ரத்ததானம் செய்வதற்காக நடமாடும் ரத்ததான வங்கியை ரூ.50 லட்சத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அரசு பொது மருத்துவமனையில் துவக்கி வைத்தார். இதன்மூலம் 8000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் அதிக யூனிட் ரத்தம் தானமாக பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆனால் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
விரைவில் அதிக ரத்தம் தானமாக பெறுவதிலும் தமிழகம் முதலிடம் பெறும். மாநகராட்சி சார்பிலும் ரத்தவங்கி நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு தானமாக பெறும் ரத்தம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் சம்பு கலோலிகர் பேசும்போது, 1396984945 தமிழகம் முழுவதும் 285 ரத்த வங்கிகள் உள்ளன. ரத்த வங்கி மூலம் சேகரிக்கும் ரத்தத்தில் 0.008 சதவீதம் மாசு உள்ளது. அதை 100 சதவீதம் மாசு இல்லாமல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
விழாவில் 169 முறை ரத்ததானம் செய்த ராஜசேகரன், 139 முறை ரத்ததானம் செய்த டாக்டர் கனகா உட்பட 100க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்த 50 பேரை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
மாநகராட்சி எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்குனர் ஜோதி நிர்மலா, சென்னை மருத்துவ கல்லூரி டீன் மோகனசுந்தரம், ரத்த வங்கி துறை தலைவர் கே.செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.