தினமணி 26.06.2013
தினமணி 26.06.2013
மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் படகு சவாரி
மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில்
செவ்வாய்க்கிழமை படகு சவாரி துவக்கி வைக்கப்பட்டது. இதில் சவாரி செய்வதற்கு
15 நிமிடத்துக்கு பெரியவருக்கு ரூ. 20-ம், சிறியவருக்கு ரூ.15-ம் கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.
இந்தப் பூங்காவில் செயல்படாமல் இருந்த படகு சவாரி குளம் ரூ. 2.60
லட்சத்தில் மராமத்து செய்யப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் பழைய தண்ணீர்
முழுவதும் வெளியேற்றப்பட்டு, தளம் புதுப்பிக்கப்பட்டு நூறு லாரிகளில் நல்ல
தண்ணீர் நிரப்பப்பட்டது. பின்னர் இரண்டு படகுகள் வர்ணம் பூசப்பட்டு
விடப்பட்டன.
செவ்வாய்க்கிழமை குளத்தில் படகு சவாரியை ஆணையர் ஆர். நந்தகோபால் முன்னிலையில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார்.
நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ.மதுரம், துணை ஆணையர் (பொறுப்பு)
சின்னம்மாள், செயற்பொறியாளர் சந்திரசேகரன், உதவிச் செயற்பொறியாளர்
பாலமுருகன், பொறியாளர் இந்திராதேவி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆணையர் கூறுகையில், இங்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8
மணி வரை படகு சவாரி செய்யலாம். குளத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு
பெரியவருக்கு ரூ. 20-ம், சிறியவருக்கு ரூ.15-ம் கட்டணம். தற்போது 2 படகுகள்
விடப்பட்டுள்ளன. மேலும் 4 படகுகள் விரைவில் விடப்படும். மழை பொய்த்த
நிலையிலும், பொதுமக்கள் பொழுதுபோக்கு அம்சத்தை கருத்தில் கொண்டு குளத்தில்
தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக, பிளாஸ்டிக் தென்னை மரங்களை பூங்காவில் நிறுவ
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் பல வண்ண மரங்கள்
நிறுவப்படும். இது பொதுமக்களை வெகுவாகக் கவரும் என்றார்.