தினமணி 12.09.2014
மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் பிரச்னைக்கு இன்று தீர்வு
மாநகராட்சியில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள 21 வார்டுகளில் தாற்காலிகப் பணியாளர்களாக உள்ள சுமார் 680 துப்புரவுத் தொழிலாளர்களும் தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்திய 16 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்தை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
அதில், சேலம் மாவட்ட அரசிதழில் தாற்காலிக தொழிலாளர்களின் தினசரி ஊதியம் ரூ.165 ஆக இருப்பதை ரூ.246 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
இப்போது தனியார் நிறுவனம் தங்களுக்கு ரூ.211 வரை தர முன் வந்துள்ளது. அதை ரூ.246 ஆக உயர்த்தி வழங்கினால் எங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தினசரி ரூ.246 ஊதியம் வழங்கினால் போராட்டத்தை விலக்கிக் கொண்டு, மற்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று போராட்டக் குழுவைச் சேர்ந்த ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.மணி தெரிவித்துள்ளார். இதனால் துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு வெள்ளிக்கிழமை முடிவு எட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.