தினமலர் 27.07.2010
மாநகராட்சி துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைப்பு! கவுன்சிலர்களின் எதிர்ப்பை மீறி நடவடிக்கை
சேலம்: சேலம் மாநகராட்சியில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி நேற்று திடீரென்று மாநகராட்சி துப்புரவு பணியின் ஒரு பகுதி மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு கவுன்சிலர்களின் எதிர்ப்பை மீறி ஒப்படைக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்பு சேலம் மாநகராட்சியில் இரண்டு, ஏழு, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 29, 30, 31, 32, 33 47 ஆகிய 21 வார்டு துப்புரவு பணியை பெங்களூரு ஸ்வச்சதா கார்ப்பரேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஜூன் 30ம் தேதியுடன் ஸ்வச்சதா கார்ப்ரேஷனின் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. சேலம் மாநகராட்சி சார்பில் 21 வார்டு துப்புரவு பணியை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் பெங்களூரு ரமணா ரெட்டி கார்ப்பரேஷனை சேர்ந்த தனியார் நிறுவனம் வசம் துப்புரவு பணி ஒப்படைக்க மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அ.தி.மு.க.,- பா.ம.க., மற்றும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மன்ற கூட்டத்தில் துப்புரவு பணி விவகாரம் குறித்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது. கவுன்சிலர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பால் துப்புரவு பணி விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் உரிய முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
நேற்று திடீரென்று சேலம் புது பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்த 21 வார்டு துப்புரவு பணி ரமணா ரெட்டி நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான துவக்க விழா நடந்தது. மேயர் ரேகாபிரியதர்ஷினி, கமிஷனர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் சுகாதார நிலைக்குழு தலைவர் தனசேகரன், அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுகாதார நிலைக்குழு தலைவர் தனசேகரன் கூறியதாவது: கடந்த மன்ற கூட்டத்தில் துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைப்பதற்கான தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு, மன்ற கூட்டத்தில் வைத்து தான் மீண்டும் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும். ஆனால், விதிமுறை மீறி மேயர் மற்றும் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவது எந்த வகையில் நியாயம். கடந்த வாரம் சுகாதார நிலைக்குழு கூட்டம் நடத்தினர். அதில், ஒட்டு மொத்த கவுன்சிலர்களின் முடிவை கேட்காமல் அவர்களாகவே தனியார் வசம் ஒப்படைக்க முன் வந்துள்ளது முறையற்றது, என்றார்.
மேயர் ரேகாபிரியதர்ஷினி கூறியதாவது: அரசு விதிமுறைக்கு ஏற்பவே துப்புரவு பணியின் ஒரு பகுதி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் மட்டுமே இந்த பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம் சிறிது நாட்கள் துப்புரவு பணி மேற்கொள்ளட்டும். அதில் அவர்கள் பணி சரியில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும், என்றார்.பல்வேறு கவுன்சிலர்களின் எதிர்ப்பை மீறி ஒப்படைக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.