தினமலர் 06.01.2014
மாநகராட்சி துவக்கப்பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்
கோவை :மாநகராட்சிக்கு உட்பட்ட துவக்கப்பள்ளிகளில், விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு உபகரணங்கள் வாங்க, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில், 16 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர் நிலைப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 41 துவக்கப்பள்ளிகள், சிறப்பு மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி தலா ஒன்று என, 83 பள்ளிகள் உள்ளன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு கல்வியுடன், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், மாநகராட்சி வசமுள்ள துவக்கப்பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 55 உள்ளன. இதில், பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில், விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. 20 பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் நிறுவ வேண்டியுள்ளது. அந்த பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து, விளையாட்டு உபகரணங்கள் நிறுவ 60 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டதும், துவக்கப்பள்ளிகளில் சீசா, சறுக்கு, ஊஞ்சல், படிக்கட்டு விளையாட்டு உள்ளிட்ட உபகரணங்கள் நிறுவப்படவுள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் முறை புகுத்தப்பட்டுள்ளதால், கல்வித்திறனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கவும், விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும், சக மாணவர்களுடன் குழுவாக விளையாட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி கல்வி நிதியில், விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தி, விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்படுகிறது’ என்றார்.
மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் முறை புகுத்தப்பட்டுள்ளதால், கல்வித்திறனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கவும், விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும், சக மாணவர்களுடன் குழுவாக விளையாட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.