தினமலர் 05.03.2010
மாநகராட்சி தெரு மின் விளக்கு தனியார் பராமரிக்க நடவடிக்கை
திருச்சி: “திருச்சி மாநகராட்சிப் பகுதியிலுள்ள தெரு மின்விளக்குகளை நடப்பாண்டிலிருந்து தனியார் நிறுவனம் மூலம் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது‘ என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 31 ஆயிரத்து 153 தெரு மின் விளக்குகள் உள்ளன. இந்த மின் விளக்குகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மின்சக்தி சேமித்தல் போன்ற காரணங்களுக்காக, மின் விளக்குகளை தனியார் நிறுவனம் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சக்தி சேமிப்புக் கருவி தேவைப்படும் இடங்களில் பொருத்தி, அதை கணினி மூலம் கண்காணித்து, பராமரிப்பு பணி மேற்கொள்வது. இதன்மூலம் மின் பயனீட்டு அளவு குறைக்கப்படுவதோடு, மின் விளக்கு எரியும் நேரத்தில், ஏற்படும் வெப்பம் காரணமாக உமிழப்படும் கார்பன் அளவு குறைவதற்கான வாய்ப்புள்ளதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. தற்போது மாநகராட்சியால் செலுத்தப்படும் மின் கட்டணத் தொகை, தனியார்மயமாக்கும் போது குறைய வாய்ப்புள்ளது. இந்த குறைவு தொகையில் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஊக்கத்தொகையாக தனியார் நிறுவனத்திடமிருந்து மாநகராட்சி பெறுவதற்கான வாய்ப்பும் ஏற்படும். இதன்காரணமாக நடப்பாண்டிலிருந்து மின் விளக்கு பராமரிப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக 2010-11ம் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.