தினமணி 18.02.2010
மாநகராட்சி தேர்தல்: அரசின் அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
பெங்களூர், பிப்.17: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பியூசி தேர்வுகள் நடைபெறவுள்ளன, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர் எனவே மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, தேர்தலை நடத்த கால அவகாசம் அளிக்கக் கோரி அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு இவ்வாறு அப்பீல் செய்யும் என்பதை முன்கூட்டியே எண்ணி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்த கால அவகாசம் அளிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் தரப்பு, மற்றும் தேர்தல் ஆணைய தரப்பு வாதங்களை உச்ச நீதிமன்றம் கேட்டறியும்.
அதன் பிறகே தேர்தலை நடத்த கால அவகாசம் அளிப்பதா அல்லது கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி தேர்தலை நடத்த உத்தரவிடுவதா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும்.
இதற்கிடையே கேவியட் மனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் பி.ஆர்.ரமேஷ், ராமச்சந்திரப்பா, ஹுச்பப்பா மற்றும் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் ஆகியோர் புதன்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றனர்.