தினமணி 09.03.2010
மாநகராட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது
பெங்களூர், மார்ச் 8: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் திங்கள்கிழமை துவங்கியது.
பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு கடைசியாக 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடந்தது. அந்த மாநகாரட்சி பதவிக்காலம் 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.
அதன்பிறகு பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை. 2001-ல் மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தபோது மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது.
அது இப்போது 198 ஆக உயர்ந்துள்ளது. மாநகராட்சியுடன் பெங்களூர் நகரைச் சுற்றியுள்ள 7 நகரசபைகள், ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் 111 கிராமங்கள் சேர்க்கப்பட்டன. இதையடுத்து மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்தது. இந்த 198 வார்டுகளில் 91 வார்டுகள் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஏ மற்றும் பி பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 198 வார்டுகளுக்கும் மார்ச் 28-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கையை மாநில தேர்ல் ஆணையம் திங்கள்கிழமை காலை வெளியிட்டது. இதையடுத்து வேட்புமனுதாக்கல் துவங்கிய முதல் நாளில் சகாயபுரம் வார்டில் மட்டும் ஒருவர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தார். மற்ற 197 வார்டுகளிலும் யாரும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை. தேர்தல் பற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமைதான் வெளியிடப்பட்டது.
எனவே, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பட்டியலை இறுதி செய்து வேட்பாளர் பெயர்களை அறிவிக்கும். அதன் பிறகே அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்வர்.
வேட்புமனுதாக்கல் செய்ய மார்ச் 15-ம் தேதி கடைசிநாளாகும். மார்ச் 17-ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் வேட்புமனுவை வாபஸ் பெற மார்ச் 19-ம் தேதி கடைசிநாளாகும். இதைத்தொடர்ந்து மார்ச் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மாநகராட்சி தேர்தலில் முதன் முதலாக எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ஒரு வேட்பாளர் ரூ.5 லட்சம் வரை செலவு செய்யலாம்.