தினமலர் 09.02.2010
மாநகராட்சி நெறிமுறைகளை கவுன்சிலர்கள் மீறக்கூடாது : மேயர் ‘அட்வைஸ்‘
கோவை : “”கவுன்சிலர்கள், மாநகராட்சி நெறிமுறைகளை மீறி செயல்படக்கூடாது,” என்று மேயர் வெங்கடாசலம் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் நேற்று அளித்த பேட்டி: நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் மாநகராட்சி சார்பில் திறக்கப்படும் கட்டடங்கள், பூங்காக்கள், மேல்நிலை தொட்டிகளுக்கு “உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நினைவு -2010′ என்று பெயர் வைப்பதற்கான தீர்மானம், மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 64 வது வார்டு கவுன்சிலர் மெகர்பான், அவரது வார்டில், கே.கே.புதூர், சின்னசுப்பண்ணன் தெருவில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பூங்காவை தன்னிச்சையாக திறந்து வைத்துள்ளார். இது மாநகராட்சி விதிமுறைகள், நெறிமுறைகளுக்கு முரணானது. இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கவுன்சிலர்கள், மாநகராட்சி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி விதிமுறைகளின்படி மேயர், துணை மேயர், கமிஷனர், துணைக்கமிஷனர் ஆகியோரை கொண்டே திறப்பு விழா நடத்தப்பட வேண்டும்; தன்னிச்சையாக கவுன்சிலர்கள் நடத்தக்கூடாது. கவுன்சிலர் மெகர்பான், அதிகாரிகளை அழைத்து முறைப்படி திறப்பு விழா நடத்தாததால், மாநகராட்சி விதிமுறைகளின்படி அதிகாரிகளுடன் சென்று பூங்காவை திறந்து வைத்தோம்; இதில் கவுன்சிலர் பங்கேற்கவில்லை. இவ்வாறு, வெங்கடாசலம் தெரிவித்தார். பேட்டியின் போது, துணை மேயர் கார்த்திக் உடனிருந்தார்.