தினமலர் 26.01.2010
மாநகராட்சி பகுதியில் ‘சிக்–குன் குனியா‘ பாதிப்பு அதிகம் : இலவசமாக சித்த மருந்து வினியோகம்
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில்தான் “சிக்–குன் குனியா‘ காய்ச்சல் அதிகம் உள்ளது. இந்தாண்டு ஜன.,20 வரை 14 பேருக்கு இக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, இன்று முதல் பொதுமக்களுக்கு சித்த மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.சிக்–குன்குனியா, டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரி டாக்டர் வரதராஜன் பேசியதாவது : 2006ல் எட்டு கிராமங்களில், 22 பேருக்கு சிக்–குன் குனியா இருந்தது. 2007ல் இல்லை. 2008ல் 15 பேர், 2009ல் 128 பேர் இக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பரில் மட்டும் 15,000 பேருக்கு பலவித காய்ச்சல் ஏற்பட்டது. இதில், செப்டம்பரில் 16 பேர், அக்.,23, நவ.,36, டிச.,51 பேர் சிக்–குன் குனியாவால் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு ஜன.,20 வரை காய்ச்சல் ஏற்பட்ட 124 பேரில், 14 பேருக்கு சிக்–குன் குனியா உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குதான் இக்காய்ச்சல் ஏற்படுகிறது.
இதில் ஆண்கள்தான் அதிகம். தேங்கிய தண்ணீர் போன்ற காரணங் களால் மாநகராட்சி பகுதியில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றார்.மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியம் பேசுகையில், “”சிக்–குன் குனியா, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, மாநகராட்சிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இன்று முதல் யானைக்கல், நரிமேடு, காமராஜர்சாலையில் உள்ள சித்த மருந்தகம் மற்றும் அனுப்பானடி, ஒர்க்ஷாப் ரோட்டில் உள்ள ஆயுர்வேத மருந்தகங்களில், சித்த மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது,” என்றார்.இந்த காய்ச்சல்கள் பரவ கொசுவே முக்கிய காரணம். கொசு ஒழிப்பில் மாநகராட்சி அக்கறை காட்டினால் பல்வேறு தொற்று நோய்களை ஒழிக்கலாம்.