தினமலர் 15.02.2010
மாநகராட்சி பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் : துணை முதல்வர் அறிவிப்பு
சென்னை :”சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பட்டதாரி, உடற்கல்வி மற்றும் இசை ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.தனியார் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன, ” என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மேற்படிப்பை தொடரும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, தி.நகரில் புதுப்பிக்கப்பட்ட தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது.ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு, துணை முதல்வர் ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கி பேசியதாவது:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம்,பொறியியல், ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி மற்றும் பி.ஏ., – பி.எஸ்.சி., உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது.பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள், தங்கள் பாடப்பிரிவில் 200 மதிப் பெண் பெற்றவர்கள், மாநகராட்சி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 27 மாணவர்கள் என, அனைவருக்கும் மொத்த ஊக்கத்தொகையாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 250 ரூபாய் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக ஒன்பது லட்சத்து 72 ஆயிரத்து 250 ரூபாய் வழங்கப்படுகிறது.
இது போல, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சிறந்த தேர்ச்சி விகிதம் காட்டிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் களுக்கு மொத்த ஊக்கத் தொகையாக நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது.மொத்தத்தில் 765 ஆசிரியர்களுக்கும், 1,300 மாணவ, மாணவியருக்கும் ஊக்கத்தொகையாக 24 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 95 பட்டதாரி ஆசிரியர்கள், 56 உடற்கல்வி ஆசிரியர்கள், நான்கு இசை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.தற்போது, மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து, தனியார் பள்ளிகளை காட்டிலும் சிறந்து விளங்குகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கம், 59 லட்சம் ரூபாயில் சிறப்பாக சீரமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.நிகழ்ச்சியில், மாநகர மேயர் சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், மாநகராட்சி இணை கமிஷனர் ஆஷிஷ் சட்டர்ஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.