தினமணி 22.07.2010
மாநகராட்சி பள்ளிகளில் பெஞ்ச், டெஸ்க் ஒப்படைப்புகோவை, ஜூலை 21: மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாக மாநகராட்சி பள்ளிகளில் 1,204 பெஞ்ச், டெஸ்குகள் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 87 பள்ளிகளுக்கு ரூ. 87.5 லட்சத்தில் பெஞ்ச், டெஸ்க் வாங்க 2007 டிசம்பரில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. கிழக்கு மண்டலத்துக்கு ரூ. 21 லட்சத்திலும், மேற்கு மண்டலத்தில் ரூ. 24 லட்சத்திலும், வடக்கு மண்டலத்தில் ரூ. 22.75 லட்சத்திலும், தெற்கு மண்டலத்தில் ரூ. 19.75 லட்சத்திலும் பெஞ்ச், டெஸ்க் வாங்க முடிவு செய்யப்பட்டது.
ஒப்பந்தப் புள்ளி திறனாய்வுக் குழுவின் ஆலோசனைப்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தப் புள்ளி 2008 மார்ச்சில் வழங்கப்பட்டது.
கோவையில் தரமான பொறியியல் பொருட்களை செய்யும் ஆயிரக் கணக்கான நிறுவனங்கள் இருக்கும்போது, காரைக்குடியில் உள்ள நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து கல்விக்குழு உறுப்பினர்கள் சந்தேகம் எழுப்பினர்.÷இதையடுத்து கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், காரைக்குடியில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அதிரடி ஆய்வு செய்தனர்.
÷போதுமான உள்கட்டமைப்பு வசதிகளோ, ஊழியர்களோ இல்லாததால் தரமான பெஞ்ச், டெஸ்குகளை இந் நிறுவனத்தால் வழங்க இயலாது என்று, மாநகராட்சி ஆணையருக்கு இக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.÷அரசு நிறுவனமான காதிகிராப்ட் அல்லது டான்சி நிறுவனத்தில் பெஞ்ச், டெஸ்குகளை ஆர்டர் செய்யலாம் என இக்குழு பரிந்துரை செய்தது. இதன்படி, டெஸ்க், பெஞ்சுகளை டான்சி நிறுவனத்தில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கலாம் என்று, மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
÷இருப்பினும் அரசு நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை கொடுப்பதற்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போடப்பட்டது. கல்விக்குழுவின் ஓராண்டு முயற்சிக்குப் பின், பெஞ்ச், டெஸ்க் தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி டான்சி நிறுவனத்திடம் கடந்த நவம்பரில் வழங்கப்பட்டது. அனைத்து பெஞ்ச், டெஸ்குகளும் டான்சி நிறுவனத்திடம் அருந்து ஜூலை முதல்வாரத்தில் பெறப்பட்டன.÷மண்டல வாரியாக உள்ள பள்ளிகளுக்கு இப் புதிய பெஞ்ச், டெஸ்குகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய பெஞ்ச், டெஸ்குகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவற்றை கல்விக்குழுத் தலைவர் கல்யாணசுந்தரம் ஒப்படைத்தார்.
மாநகராட்சியில் பெரும்பாலான துவக்கப் பள்ளிகளில் குழந்தைகள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை இருந்தது. புது பெஞ்ச், டெஸ்குகள் கிடைத்துள்ளதால், குழந்தைகள் தரையில் அமர்ந்து படிக்க வேண்டிய அவலநிலை மாறியுள்ளது.