மாநகராட்சி பள்ளிகளில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
திருப்பூர் அருகே மண்ணரையில் உள்ள கிருஷ்ணசாமி கவுண்டர் புஷ்பவதி அம்மாள் நினைவு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 7 வகுப்பறைகள், சுற்றுச் சுவர், கழிப்பறைக் கட்டடம், கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மேயர் அ.விசாலாட்சி, ஆணையர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். புதிய கட்டடங்களை திறந்து வைத்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியது:
மண்ணரையில் உள்ள இப்பள்ளிக்கு இடம் வழங்கி, கட்டடங்கள் கட்டிக் கொடுத்து இளைய சமுதாயம் முன்னேற கி.சரவணபிரகாஷ் குடும்பத்தினர் மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் வழிகாட்டி உள்ளனர். பொருளாதார தடையினால் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் அனைத்து மாணவர்களும் தடையின்றி கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.
தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு கல்வி வளர்ச்சி அவசியம் என்ற அடிப்படையில், கடந்த நிதி ஆண்டில் மட்டும் கல்வித் துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாணவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி, வருங்காலத்தில் இந்தியாவின் தூண்களாக விளங்க வேண்டும். கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்காக, மாநகராட்சி மூலமாக ரூ.40 லட்சம் செலவில் அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு கழிவறை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.10 லட்சம் மதிப்பில் செய்து தரப்பட்டுள்ளது என்றார்.
ஜோ.ர.சார்ல்ஸ் ஜான் சாமூவேல், ப.முத்துசாமி, கவுன்சிலர் அ.சுப்பிரமணியம், கி.சரவணபிரகாஷ் குடும்பத்தினர், ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் மணிஷ் பர்மானந்தா, அன்கூர் மேத்தா, ஹர்திக் சேட்டா, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அ.அழகர்சாமி, பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.