தினமணி 12.07.2013
தினமணி 12.07.2013
மாநகராட்சி பாளை. மண்டலக் கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலக் கூட்டம், மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம் மண்டல அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு
முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக மண்டலக்
கூட்டம், கூட்ட அரங்கத்தில் நடைபெறவில்லை.
இந்நிலையில் கூட்ட அரங்கை புணரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள்
முடிவடைந்ததைத் தொடர்ந்து, புணரமைக்கப்பட்ட கூட்ட அரங்கத்தை மேயர் விஜிலா
சத்தியானந்த் வியாழக்கிழமை திறந்து வைத்தார். தொடர்ந்து அரங்கத்தில்
கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார். மண்டல
தலைவர் எம்.சி. ராஜன் முன்னிலை வகித்தார். உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும்
மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 24-வது வார்டு உறுப்பினர் பி.
பரமசிவன் பேசுகையில், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் இருந்து
வரும் பஸ்கள் கே.டி.சி. நகர், வி.எம். சத்திரம் பகுதியில் இருந்து புதிய
பஸ் நிலையத்திற்கு வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகின்றன. எனவே, வி.எம்.
சத்திரம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். அங்கிருந்து புதிய பஸ்
நிலையத்திற்கு சர்குலர் பஸ்களை இயக்க வேண்டும் என்றார் அவர்.
12-வது வார்டு உறுப்பினர் ஐ. விஜயன் பேசுகையில், போலீஸ் குடியிருப்பு
பகுதியில் புதர் மண்டி கிடக்கிறது. அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றார் அவர். மேலும் உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து
பேசினர். அதற்கு மேயர், மண்டல தலைவர் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.