தினமணி 10.07.2013
தினமணி 10.07.2013
மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க தன்னார்வ அமைப்புகள் அணுகலாம்’
தன்னார்வ அமைப்புகள் மாநகராட்சி பூங்காக்களைப் பராமரிக்க அணுகலாம் என்று மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி பூங்காக்களைப் பராமரிப்பது மற்றும் மாநகராட்சிப்
பகுதிகளில் மரம் நட்டுப் பராமரிப்பதில் பொது அமைப்புகளும் பங்கேற்பது
தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன்
தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னிலை வகித்து மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:
மாநகராட்சிப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர், தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களுடன் இணைந்து மரம் நட்டால் சிறப்பானதாக இருக்கும். மாநகராட்சிப்
பகுதியில் மொத்தம் 1,500 பூங்காக்களுக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல்
கட்டமாக 60 வார்டுகளில் உள்ள 165 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிப் பகுதியில் பூங்காக்களை அமைக்கவும், தன்னார்வ அமைப்புகள்
மூலம் பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட
இடங்களை தனியார் அமைப்புகள் மாநகராட்சி அலுவலர்களை ஒரு வார காலத்தில்
அணுகலாம். இப் பூங்காக்களுக்குத் தேவையான தண்ணீர் வசதிகளை மாநகராட்சி
வழங்கும்.
பூங்காவை ஏற்றுப் பராமரிப்பது, அமைப்பது ஆகிய பணிகளுக்கு மாநகராட்சி
அனுமதி வழங்கும். பூங்கா பராமரிக்கும் அமைப்புகள் அதை தங்களுக்கு மட்டுமே
உரிமை உள்ளதாகக் கருதக் கூடாது.
அது மக்களின் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஆட்சியர் மு.கருணாகரன் பேசியது:
மாநகராட்சிப் பகுதியில் பூங்காவிற்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் போதிய
பராமரிப்பின்றி இருப்பதால், சில இடங்களில் சமூக விரோதச் செயல்கள்
நடைபெறுகின்றன. அந்த இடங்களை ஆக்கிரமிப்பவர்களை வெளியேற்றுவதும் கடினமான
காரியமாக இருக்கிறது.
இதுபோன்ற பிரச்னைகள் உருவாகாமல் இருப்பதற்காகவும், அதே சமயம் இந்தப்
பகுதிகளை சமூகத்திற்குப் பயனுள்ள வகையிலே கொண்டுவர வேண்டும் என்ற வகையிலும்
இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, மண்டலக்
குழுத் தலைவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தனியார்
அமைப்புகள், ரோட்டரி சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து
கொண்டனர்.