தினகரன் 28.10.2010
மாநகராட்சி மருத்துவமனையில் சமுதாய சமையல் கூடம்
திருப்பூர், அக்.28: திருப்பூர் மாநகராட்சி கந்தசாமி செட்டியார் மகப்பேறு மருத்துவமனையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாரத் காஸ் நிறுவனம் சார்பில் சமுதாய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம், பி.என்.ஜி., ஆகிய துறை களின் பரிந்துரையின்படி, மாநிலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களின் வசதிக்காக சமுதாய சமையல் கூட அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் உள்ள திருப்பூர் மாநகராட்சி கந்தசாமி செட்டியார் மகப்பேறு மருத்துவமனையில் இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய அவசரத்தேவைகளுக்கு சுடுநீர் தயாரித்தல், நோயாளிகளுக்குத் தேவை யான கஞ்சி தயாரித்தல், மருத்துவரின் ஆலோசனையின் படி நோயாளிகளுக்கும், உடன் இருக்கும் நபர்களுக்கும் தேவையான உணவுப்பொருட்களை தயார் செய்து கொள்ளவும் இந்த சமுதாய சமையல் கூடம் பயன்படும்.
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பாரத் காஸ் மற்றும் திருப்பூர் கவுரி துர்கா காஸ் ஏஜென்சீஸ் சார்பில், சமையல் அறை, மேடை வசதி, சிலிண்டர்கள், அடுப்பு, பர்னர், பால்குக்கர் உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த திட்டத்தின் துவக்க விழா மகப்பேறு மருத்துவ மனை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வ ராஜ் விழாவுக்கு தலைமை தாங்கினார். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சமுதாய சமையல் கூடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் நலவாரியத் தலைவர் செல்லமுத்து, பாரத் பெட்ரோலியத்தின் மண்டல மேலாளர் தங்கவேல், மாநகராட்சி பொறியாளர் கவுதமன், மாநகர நல அலுவ லர் ஜவஹர்லால், கவுரி துர்கா காஸ் ஏஜென்சி நிர்வாகி சாமிவேலு, பாரத் பெட்ரோலியம் எல்.பி.ஜி. விற்பனை அதிகாரி கிரன்குமார் சிஹாரா, பிரேம்நாதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
பாரத் பெட்ரோலியம் அமைத்தது திருப்பூர் அரசு மருத்துவமனையில் விரைவில் சமுதாய சமையல் கூடம்
இது தொடர்பாக பாரத் பெட்ரோலியத்தின் மண்டல மேலாளர் தங்கவேல் கூறுகையில், “திருப்பூர் மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் இதுபோன்ற சமுதாய சமையல் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக கவுரி துர்கா காஸ் ஏஜென்சி சார்பில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் இத்திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் மேலும் சில மருத்துவமனைகளில் இத்திட்டம் செயலாக்கப்படும். முதல் சில மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பின்னர் அரைமணி நேரத்துக்கு ரூ3 என்ற அடிப்படையில் மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்,” என்றார்.