தினமலர் 23.02.2010
மாநகராட்சி மாணவருக்கு உணவுடன் சிறப்பு வகுப்பு
மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மதிப்பெண்களில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுடன் சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான 24 பள்ளிகளில் 2885 மாணவர்கள், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் நூறு பேரை தேர்வு செய்து உணவு அளித்து, தங்க வைத்து, சிறப்பு பயிற்சி அளிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அரையாண்டு தேர்வில் மூன்று பாடங்களுக்கு மேல் பெயில் ஆன மாணவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகால் பந்தடி மாநகராட்சி பள்ளியில் இவர்களுக்கு இன்று முதல் 31.3.10 வரை சிறப்பு வகுப்புகள் நடக்க உள்ளன. பள்ளியிலேயே தங்கவும், மூன்று வேளை உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தனியாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பயிற்சி தரப்பட உள்ளது. முனிச்சாலை என்.எம். எஸ்.எம்., மாநகராட்சி பெண்கள் மேனிலைப் பள்ளியில் இவர்களுக்கான வகுப்புகள் நடக்கும்.
அறிவுக்கு மரியாதை“: மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களை, மாநில ரேங்க் எடுக்க வைக்கும் முயற்சியாக தனி பயிற்சி வகுப்புகளும் நடக்க உள்ளன. இதற்காக 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டங்களை நேற்று மகால் பந்தடி மாநகராட்சி பள்ளியில் கமிஷனர் செபாஸ்டின் நேற்று துவக்கினார். மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், கல்வி அலுவலர் அம்மையப் பன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.