தினமலர் 07.10.2010
மாநகராட்சி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு பயிற்சி
சென்னை : “”சென்னை மாநகராட்சி 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் 200 பேருக்கு அடுத்த மாதம் முதல் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்,” என, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
மாநகராட்சி மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., மேலாண்மை கல்வித் துறை சார்பில் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது: சென்னை மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 67 பேர், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 33 பேர் என 100 பேருக்கு இந்த மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த மூன்று நாள் பயிற்சி, பெரியளவில் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு உதவும்.
இதை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 121 பேருக்கு 10 லட்ச ரூபாய் செலவில் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும். இதற்கு முன் அண்ணா பல்கலையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியும் நிச்சயமாக கல்வியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. 1995ம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி 50 சதவீதமாகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி 40 – 50 சதவீதமாகவும் இருந்தது. அது தற்போது பிளஸ் 2வில் 85 சதவீதமாகவும், 10ம் வகுப்பில் 86 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
அண்ணா பல்கலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கிய பின், மாநகராட்சி மாணவர்கள் தகுதி அடிப்படையில் அண்ணா பல்கலையில் சேரும் நிலை உருவாகியுள்ளது. ஐ.ஐ.டி., பயிற்சியை தொடர்ந்து மாநகராட்சி மாணவர்கள், ஐ.ஐ.டி.,யிலும் சேரும் நிலை உருவாகும். சென்னை மாநகராட்சி 9ம் வகுப்பு மாணவர்கள் 100 பேர், பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, “பிட்ஜி‘ மையத்தில் ஐ.ஐ.டி., – ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி அடுத்த மாதம் இறுதியில் துவக்கப்படும். இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் பேசுகையில், “மாணவர்கள் ஆசிரியர்களை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் என்பதால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டியது அவசியம். தலைமை பொறுப்பில் இருக்கும் தலைமையாசிரியர்கள் பதட்டம் அடையாமல் இருப்பது அவசியம். உலகளவில் நம்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உள்ளனர். அவர்களை சரியாக பயன்படுத்தினால், நாட்டின் சொத்தாக மாறுவர். தவறாக கையாண்டால், மிகப்பெரிய பிரச்னையாக மாறும்‘ என்றார்.
மாநகராட்சி துணை கமிஷனர் அனு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஐ.ஐ.டி., மேலாண்மை கல்வித்துறை தலைவர் கணேஷ் வரவேற்றார். மாநகராட்சி கல்வி அலுவலர் மாதவ பிள்ளை நன்றி கூறினார்.