தினமலர் 17.03.2010
மாநகராட்சி வரியினங்களை வசூலிக்க வீதி, வீதியாக வரும் மொபைல் வாகனம்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 85 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. இறுதி நாளுக்கு 14 நாட்கள் எஞ்சியுள்ளதால், 100 சதவீத இலக்கை எட்ட, மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் களமிறங்கி உள்ளது. இதற்காக, மொபைல் வரி வசூல் வாகனம் மூலம் பல்வேறு பகுதிகளிலும் வரி வசூல் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 80 ஆயிரம் சொத்து வரியினங்கள்; 12 ஆயிரம் தொழில் வரி இனங்கள்; 48 ஆயிரம் குடிநீர் இணைப்பு வரியினங்கள் உள்ளன. மாநகராட்சி அலுவலகம், குமரன் வணிக வளாகம், பாரதியார் வணிக வளாகம், பூச்சக்காடு, ராயபுரம் பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் வரி வசூலிப்பு மையங்கள் செயல்படுகின்றன. இந்த வரி வசூலிப்பு மையங்கள் மூலம், மாநகராட்சிக்குச் சேர வேண்டிய அனைத்து வகை வரியினங்களும் வசூலிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டின் மொத்த வரியின வருவாய் இலக்கு 23 கோடி ரூபாய். இதில், தற்போது வரை 85 சதவீத அளவாக 20 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதர வரியினத்தை வசூலிக்க மாபைல் வரி வசூல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது: குடிநீர் பழுது நீக்கும் மொபைல் வாகனம், தற்காலிகமாக மொபைல் வரி வசூல் மையமாக மாற்றப் பட்டுள்ளது.
இதுவரை 85 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் எஞ்சியுள்ளதால், 100 சதவீத இலக்கையும் எட்டி விடுவோம். குடிநீர் பழுது நீக்கும் வாகனத்தை, அதற்கு பணியில்லாத காலங்களில் வரி வசூல் வாகனமாக மாற்றிப் பயன்படுத்தி வருகிறோம். இதனால், குடிநீர் பழுதுபார்த்தல் எவ்வகையிலும் பாதிக்காது. மொபைல் வரி வசூல் மையத்தில் உள்ள கம்ப் யூட்டர்கள் ஆன்–லைன் மூலம் மாநகராட்சி அலுவலகத்துடன் இணைக் கப்பட்டிருக்கும். இதன் மூலம் வரி வசூலை எளிதில் பதிவு செய்ய முடியும். நேற்று புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வரிவசூல் வாகனம் நிறுத்தப் பட்டிருந்தது. இன்று கே.வி.ஆர்., நகர் பகுதியிலும், நாளை முத்தையன் கோவில் பகுதியிலும், மொபைல் வரிவசூல் மையம் மூலம் வரிகள் பெறப்படும்.
வரி செலுத்தியதற்கு உடனடியாக ரசீது கொடுக்கப்படும். தொடர்ச்சியாக, ஒவ்வொரு பகுதிக்கும் வரி வசூல் வாகனம் அனுப்பி வைக்கப்படும். இந்த வாகனத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வரி பெறப்படும். சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணங்களைச் செலுத்தி பயன்பெறலாம், என்றனர்.