தினமணி 31.12.2009
மாநகராட்சி வரி விவரங்கள் அறிய திரை தொடு கணினி அமைக்க திட்டம்
வேலூர், டிச. 29: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி விவரங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ள ரூ.3 லட்சத்தில் “திரை தொடு கணினி‘ அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
வேலூரில் மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் வரி வசூல் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி விவரங்களை எளிதில் அறிந்துகொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தற்போது சேவை மையத்தை நேரில் அணுகியே இவ்விவரங்களைப் பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து தாங்களே அறிந்து கொள்ளும் வகையில் ரூ.3 லட்சத்தில் இந்த திரை தொடு கணினியை வாங்கி மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதேபோல் வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். இதனை மேலும் சிறப்பாகச் செயல்படுத்த “கையடக்க வரி வசூல் இயந்திரம்‘ வாங்கவும் திட்டமிட்டுள்ளது.
வருவாய் உதவியாளர்கள் எவ்வித சிரமமின்றி எளிதாக இயக்கும்படி இந்த இயந்திரம் அமைந்துள்ளது. பொதுமக்கள் வரி கட்டியதும் உடனடியாக கணினி ரசீது கொடுக்க முடியும். வரி விதிப்புகளைத் திருத்தவோ, மாற்றவோ முடியாது.
எனவே சொத்துவரி வசூலுக்கு 8 கருவிகளும், தொழில்வரி வசூலுக்கு ஒன்றும், வரியில்லா இனம் வசூலிக்க ஒன்றும் என மொத்தம் 10 இயந்திரங்கள் ரூ.6 லட்சத்தில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் கேட்டு புதன்கிழமை நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன.