தினமலர் 05.01.2010
மாநகராட்சி வளர்ச்சி பணி : உள்ளாட்சி செயலர் ஆய்வு
கோவை : கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிகளை, தமிழக உள்ளாட்சித்துறை செயலர் நிரஞ்சன் மார்டி நேற்று ஆய்வு செய்தார்.கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில், தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ் டெப்போ எதிரில், ஏழு கோடி ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நடக்கிறது; 65 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தரை தளத்தில் பஸ் நிறுத்துமிடத்தை ஒட்டி கடைகள் மற்றும் அறைகள் கட்டும் பணி நடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் மேல்தளத்தில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
கோவையில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்குள், பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிக்குமாறு, கான்ட்ராக்டரிடம், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை, தமிழக உள்ளாட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறை செயலர் நிரஞ்சன்மார்டி, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். வரும் மார்ச் 31க்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டனர். ஆய்வின் போது, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், மாநகர பொறியாளர் கருணாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து, பீளமேட்டில் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள குப்பை மாற்று நிலையம், உக்கடம் புல்லுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஏழை மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், உக்கடம் கழிவு நீர்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளையும் நிரஞ்சன்மார்டி நேரில் ஆய்வு செய்தார.