தினமணி 15.04.2010
மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம்
மானாமதுரை, ஏப். 14: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நகருக்கு வெளியே நான்கு வழிச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டு பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் இதன் தலைவர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், துணைத் தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் சஞ்சீவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை மேஸ்திரி பாலு வாசித்தார். இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை வசதி பிரச்னைகள் குறித்துப் பேசினர்.
பின்னர், கூட்டத்தில் பேரூராட்சி பொது நிதி ரூ. 65 லட்சத்தில் நகரில் 1-வது வார்டு முதல் 18 வது வார்டு வரை கழிவு நீர் வாய்க்கால், சிமெண்ட் சாலை, தார்ச் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்வது, மானாமாதுரை பைபாஸ் ரோட்டில் மதுரை-தனுஷ்கோடி நான்கு வழிச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, கட்டடச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படாமல், நகருக்கு வெளியே திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.