திருச்சி: திருச்சியில், மார்க்கெட்டுக்குள் செல்லும் பாதையை அடைத்து, அ.தி.மு.க., பிரமுகர் கட்டிய சுவரை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
திருச்சி காந்திமார்க்கெட் எதிரில், டைமண்ட் ஜூப்லி இரவு நேர தரைக்கடை காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் இரவு 10, மணி முதல், காலை 8, மணி வரை வியாபாரம் நடக்கும். இந்த சந்தைக்குள் செல்ல, காந்திமார்க்கெட்டின் மெயின் நுழைவு வாயில் அமைந்துள்ள சாலையில் ஒரு நுழைவு வாயிலும், வெங்காய மண்டி சாலையில் ஒரு நுழைவு வாயிலும் உள்ளது. 6 அடி அகலத்தில் இந்த இரு பாதைகள் வழியாக தான், வியாபாரிகளும், தள்ளு வண்டிகள், டூவீலர்கள் சென்று வருவது வழக்கம்.
வெங்காய மண்டி சாலையில், உள்ள நுழைவு வாயிலின் அருகே பழனிச்சாமி என்பவர் வெங்காயக்கடை நடத்தி வருகிறார். அ.தி.மு.க., பிரமுகரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன், தனது கடை அருகே டைமண்ட் ஜூப்லி சந்தைக்கு செல்லும் பாதையை அடைத்து சுவரை கட்டினார். அதோடு, அந்த சுவற்றின் முன், ஆஸ்பெஸ்டாஸ் சீட் அமைக்கும் பணிகளையும மும்முரமாக மேற்கொண்டனர்.
இதைக் கண்ட, டைமண்ட் ஜூப்லி மார்க்கெட் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி கட்டுமான பணிகள் துரித கதியில் சுவர் கட்டி முடிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த நுழைவு வாயில் வழியாக சென்று, தொழிலாளர்களும், பொதுமக்களும் சிறுநீர் கழிப்பதால், தனது கடைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சுவர் கட்டியதாக பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதனால், உடனடியாக அந்த சுவரை இடிக்க, உதவி கமிஷனர் ராஜம்மாள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் சுவற்றை இடித்து தள்ளினர்.
கட்டட இடிபாடுகள் தற்போது வரை அங்கேயே, தேங்கி கிடப்பதால், நுழைவு வாயிலை தொழிலாளர்களும், வியாபாரிகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இடிபாடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.