தினகரன் 31.05.2010
மாவட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு சலுகை விலையில் சிமென்ட் வழங்கல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 1000 சதுர அடிக்குள் வீடு கட்டுபவர்களுக்கு 200 ரூபாய் மானிய விலையில் 400 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது.
கலெக்டர்(பொறுப்பு) வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக முதல்வர் தற்போதுள்ள சிமென்ட் விலை உயர்வை கருத் தில் கொண்டு நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் நபர் கள் வீடு கட்ட சலுகை விலையில் சிமென்ட் வழங்க தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் நபர்கள் 1000 சதுர அடிக்குள் வீடு கட்ட இருந்தால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற அங்கீகாரம் பெற்ற வரைபடத்துடன் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக தாலுகா கிடங்குகளில் பதிந்து தங்களது தேவையை குறிப்பிடலாம். இதில் ஒரு வீட் டிற்கு 200 ரூபாய் மானிய விலையில் 400 மூட்டை சிமென்ட் வரை வழங்கப்படுகிறது. சிறு, சிறு வீட்டு மராமத்து பணிகளில் உபயோகத்திற்கு 50 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது. இதற்கு ரேஷன் கார்டை மட்டும் காட்டினால் போதுமானதாகும்.சிமென்ட் மூட்டைகளுக்கான தொகையை” தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்‘ என்ற பெயருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் “டிடி‘யாக எடுத்து வர வேண்டும். சிமென்ட் மூட்டைகளுக்கு “வாட்‘ வரி இல்லை. சிமென்ட் மூட்டைகளின் ஏற்று கூலியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகமே ஏற்கிறது. நுகர்வோர்கள் தங்களது சொந்த செலவில் சிமென்ட் மூட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். இந்த சிமென்ட் மூட்டைகளை தவறான வழியில் பயன்படுத்தினால் சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில்1000 சதுர அடிக்குள் வீடு கட்டுவோர் உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப் பட்ட வரைபடத்துடனும், மராமத்து பணிகளை மேற்கொள் வோர் ரேஷன் கார்டுடனும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் பதிந்து மானிய விலையில் சிமென்ட் மூட்டைகளைபெறலாம்.