மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உரிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்
திருப்பூர்: குடிநீர் இணைப்பில் நேரடியாக மின்மோட்டாரை பொருத்தி நீரை உரிஞ்சினால் நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாநகர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தடுக்க சிக்கன நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் கையாளத் துவங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக குடிநீர் விரையமாக்கப்படுவதை தடுக்கவும், குடிநீர் விதிமீறி எடுக்கப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, குடிநீர் குழாயில் மின்மோட்டார் அமைத்து குடிநீர் உரிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டத்தில் வீட்டுக்குழாய் இணைப்பு பெற்றுள்ளவர்கள் குடிநீர் இணைப்பில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது சட்டவிரோத செயல் ஆகும்.
குடிநீர் இணைப்பில் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது தெரியவந்தால், நிரந்தர குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மின்மோட்டார் பறிமுதல் மற்றும் அபராதம் விதித்தல் போன்ற சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.