மின்மோட்டார் வைத்து குடிநீர் பிடித்தால் பறிமுதல்
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு பேரூராட்சி பகுதிகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் பிடித்தால், பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடும் வறட்சி, மின் தட்டுப்பாட்டால் குடிநீர் சீராக விநியோகம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பேரணை திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் கிடைக்கும் நீரின் அளவு மின் தடையால் பாதியாக குறைந்துள்ளது. அப்படி இருந்தும் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான வீடுகளில் மின் மோட்டார் அமைத்து குடிநீர் பிடிக்கின்றனர். இதனால் மோட்டார் இல்லாத வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யமுடியவில்லை. பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,”” மின் மோட்டார் வைத்து குடிநீர் பிடித்தால், மோட்டார் பறிமுதல் செய்யப்படும். இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது,” என்றனர்.