தினமணி 07.04.2010.
மின் வெட்டு: குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க தயாராகும் மாநகராட்சி
திருநெல்வேலி,ஏப்.6: திருநெல்வேலி மாநகர் பகுதியில் மின்வெட்டு அதிகமாக இருந்தாலும், கோடையில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படாதவாறு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இம் மாநகருக்கு கொண்டாநகரம், நாரணம்மாள்புரம், குறுக்குத்துறை, மணப்படைவீடு, பொட்டல் ஆகிய பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
உறை கிணறுகளில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீரை சேமித்துவைக்க மட்டும் 61 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இவற்றில் 1 கோடியே 92 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
வீட்டுக் குடிநீர் இணைப்புகள் 49,734 உள்ளன. சுமார் 5.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட இம் மாநகருக்கு, இக் குடிநீர் போதுமானது அல்ல. ஒரு நாளைக்கு மாநகருக்கு குறைந்தபட்சம் 5.5 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், மாநகருக்கு மொத்தமே 1.92 கோடி லிட்டரை விநியோகிக்கக் கூடியளவுக்குத்தான் கட்டமைப்புகள் உள்ளன.
மேலும் உறைகிணறுகளில், சேமிக்கும் அளவுக்கு ஏற்றாற்போல குடிநீர் எடுக்க முடிவதில்லை. குடிநீர் விநியோகத்துக்கு 349 கி.மீ. தொலைவுக்கு பகிர்மானக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இக் குழாய்களில் பெரும்பான்மையானவை பதிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால்,
பல இடங்களில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
மேலும் மாதத்துக்கு குறைந்தது 4 முறையாவது குடிநீர்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்தமாக சில நாள்கள் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.
ஆனால், கடந்த ஆண்டுகளைப்போல இல்லாமல், இந்தாண்டு கோடைக்கால குடிநீர்ப் பிரச்னையைச் சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு வார்டிலும் குடிநீர்த் தேவை அதிகமுள்ள இடத்தைக் கண்டறிந்து ஆழ்துளைக் கிணறு அமைத்து, சிண்டெக்ஸ் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு ஒரு வார்டுக்கு 3 இடங்களில் சிண்டெக்ஸ் தொட்டிகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால், ஆற்றுநீர் வராவிட்டாலும், இத் தண்ணீரைக் கொண்டு, குடிநீர்த் தேவையை மக்கள் ஓரளவுக்கு சமாளிக்கலாம் என மாநகராட்சி கணித்துள்ளது.
மின் வெட்டால் பாதிப்பு ஏற்படாது: மேலும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் நீரேற்று நிலையங்களில் நீர் எடுப்பது எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அனைத்து நீரேற்று நிலையங்களிலும் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீரேற்றம், குடிநீர் விநியோகத்தைக் கண்காணிக்கவும், குடிநீர்த் திருட்டைத் தடுக்கவும் மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோடைக்காலம் முடியும்வரை மாநகராட்சி லாரிகள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டு, மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார்.
இதனால், மின்வெட்டு, குழாய் உடைப்பு ஆகிய காரணங்களால் ஆற்றுநீர் விநியோகம் தடைபட்டாலும், லாரிகள், சிண்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர்ப் பிரச்னையைச் சமாளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதேநேரம், ஒவ்வொரு வார்டிலும் பழுதாகியுள்ள அடிகுழாய்கள், சிண்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுதுநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவற்றைப் பழுதுநீக்கும்பட்சத்தில், கோடைக்கால குடிநீர்ப் பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என மாநகராட்சி கருதுகிறது.