தினகரன் 11.08.2012
முசிறி, மண்ணச்சநல்லூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தா.பேட்டை, : முசிறியில் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி நடந்தது. பேரூராட்சி தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். செயல் அலுவலர் முத்துகுமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மகளிர் சுயஉதவி குழுக்கள், பிளாஸ்டிக் தீமைகள் குறித்த கோஷங்களுடன் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் உள்பட பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் துறையூர் ரோட்டில் கைகோர்த்து நீண்ட வரிசையாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூரில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் கீதாஸ்ரீதரன் தொடங்கி வைத்தார். நிர்வாக அதிகாரி சீனிவாசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைதலைவர் சேகா, வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினகரன் 11.08.2012