தினமணி 23.08.2013
தினமணி 23.08.2013
முதலிடம் பெற கடுமையாக உழைப்போம்
போடி நகராட்சி, தமிழகத்தில் முதலிடம் பெற்று
முன்னோடி நகராட்சியாக மாறுவதற்கு கடுமையாக உழைப்போம் என, அதன் நகர்மன்றத்
தலைவர் வி.ஆர். பழனிராஜ் உறுதி கூறினார்.
தமிழகத்தில் இரண்டாவது சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்ட போடி
நகராட்சிக்கு, சுதந்திர தினத்தில் முதல்வர் விருது வழங்கப்பட்டது. இதற்கான
பாராட்டுக் கூட்டம் மற்றும் சிறந்த நகராட்சியாக உருவாக்குவதற்கான ஆலோசனைக்
கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா
தலைமை வகித்தார். பொறியாளர் ஆர். திருமலைவாசன், மேலாளர் (பொறுப்பு)
முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதில், நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் கூறுகையில், போடி
நகராட்சியில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி
மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரூ. 80 கோடி மதிப்பில்
பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. தற்போது, 2ஆவது சிறந்த
நகராட்சி என விருது பெற்ற பின், மக்களுக்கு சேவை செய்வதில் தொய்வு
காட்டாமல், கடுமையாக உழைப்பதன் மூலம் முதலிடம் பெற முயற்சிப்போம் என்றார்.
கூட்டத்தில், சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள்,
வர்த்தகர் சங்கம், உணவு விடுதி உரிமையாளர்கள், ஆசிரியர்கள், பல்வேறு
அமைப்புகளின் பிரதிதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.