தினமணி 28.08.2009
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் புகைப்படம் எடுக்கும் பணி இன்று துவக்கம்
மதுரை, ஆக. 27: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் புகைப்படம் எடுக்கும் பணி, மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.28) துவங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன் தெரிவித்துள்ளதாவது:
விவசாயத் தொழிலாளர் நல வாரியம், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் உள்பட அனைத்து நல வாரிய உறுப்பினர்களும், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள். இத்திட்டத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்பவர்கள், இதய அறுவைச் சிகிச்சை உள்பட 51 வகையான சிகிச்சை பெறலாம்.
அரவிந்த் கண் மருத்துவமனை, குரு மருத்துவமனை, ஹார்லி ராம் மருத்துவமனை, லியோனார்டு மருத்துவமனை, மதுரை எலும்பு மூட்டு மருத்துவமனை, பிரீத்தி மருத்துவமனை, குவாலிட்டி கேர் மருத்துவமனை, ராகவேந்தர், ராசி, சரவணா, வடமலையான், வாசன், விக்ரம் உள்ளிட்ட 14 மருத்துவமனைகளில் உறுப்பினர்கள் சிகிச்சை பெறலாம்.
மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் புகைப்படம் எடுக்கும் பணி, முதலாவதாக மேலூர் வட்டத்தில் வெள்ளிக்கிழமை துவங்குகிறது. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் புகைப்படம் எடுக்கப்பட உள்ளது என்றார்.
புகைப்படம் எடுக்கப்படும் இடங்கள்: மேலூர் நகராட்சி 1 மற்றும் 2-வது வார்டு பகுதி –மேலூர் கிராம நிர்வாக அலுவலகம்.
நகராட்சி 16 மற்றும் 17-வது வார்டு பகுதி –மேலூர் நகராட்சி அலுவலகம்.
சூரக்குண்டு, தெற்குத்தெரு, டி. வெள்ளாளபட்டி, புதுசுக்காம்பட்டி, ஆட்டுக்குளம், வெள்ளலூர், உறங்கான்பட்டி, தனியாமங்கலம், கோட்டநத்தம்பட்டி, குறிச்சிப்பட்டி, கிடாரிப்பட்டி, அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி ஆகிய கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலகங்களில் புகைப்படம் எடுக்கப்படும்.