தினமணி 31.12.2009
முதல் நிலை நகராட்சியானது அறந்தாங்கி
அறந்தாங்கி, டிச. 30: அறந்தாங்கி நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகவலை நகராட்சித் தலைவர் பழ. மாரியப்பன் தெரிவித்தார்.
அறந்தாங்கியில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் புதன்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.ஏ.என். கச்சுமுஹம்மது முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
கோ. நாராயணசாமி (திமுக): “”அறந்தாங்கி எல்.என்.புரத்தில் ஊர்புற நூலகம் தொடங்கப்படும் என்று 3 மாதங்களுக்கு முன் அறிவித்தீர்கள். என்னவாயிற்று?
லெ. முரளிதரன் (திமுக): நகராட்சி இடம் அங்கே இருப்பதாகக் கூறினீர்கள்? தீர்மானம் முன்வைக்கப்படவில்லை; ஏன் தாமதப்படுகிறது?
தலைவர்: நகராட்சிக்கு இருக்கும் இடம் போதவில்லை என்று வேறு இடம் கேட்டிருக்கிறோம். இதற்கான கருத்துரு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சாதகமான பதில் வரும். உடன் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
கோ. இளங்கோ (சுயே.): “”எனது வட்டத்தில் குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஓராண்டாகவே இதுகுறித்து பேசி வருகிறேன். ஆனால், நடவடிக்கை இல்லை. நிரந்தரமாக ஆணையர் இல்லாத காரணத்தால் அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. நம் நகராட்சிக்கு என்று தனி ஆணையரை நியமிக்க தீர்மானம் இயற்ற வேண்டும்.”
தலைவர்: “”நமது நகராட்சி இரண்டாம் நிலையிலிருந்து தற்போது முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 19 புதிய ஆணையர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். ஆகையால், விரைவில் நம் நகராட்சிக்கும் தனி ஆணையர் நியமிக்கப்படுவார். குடிநீர்ப் பிரச்னை 10 நாட்களுக்குள் தீர்க்கப்படும்.”
மு.வி. பார்த்தீபன் (திமுக): “”நகர்மன்ற அலுவலகம் கட்டும் பணிக்கு 3-வது ஒப்பந்தப்புள்ளி கோரியும் கூடுதல் தொகை கேட்கப்பட்டுள்ளதால், ஒப்பந்ததாரரிடம் பேசி இப்பிரச்னையை சரிசெய்ய தீர்மானம் முன்வைத்துள்ளீர்கள். ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைக்கு நகர்மன்றம் அடிபணியக் கூடாது. வேறு ஒருவர் கூடுதல் தொகைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளார். அவருக்கு பணியை ஒதுக்கலாமே?”
தலைவர்: “”3 முறை நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டும் யாரும் ஒப்பந்தம் கோரவில்லை. இனிமேல் புதிய ஒப்பந்ததாரரைச் சேர்க்க முடியாது. ஆகேவேதான் காலம் கருதி பேசி நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.”இவ்வாறு விவாதம் நடைபெற்றது.