முறைப்படுத்தப்பட்ட காலனிகளில் சொத்து வரி வசூலிக்க கூடாது
“தலைநகரில் அண்மையில் முறைப்படுத்தப்பட்ட 895 காலனிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் வரை மாநகராட்சிகள் சொத்து வரி வசூலிக்க தில்லி பிரதேச அரசு அனுமதிக்காது” என்று தில்லி முதல்வரின் பார்லிமெண்டரி செக்ரடரி முகேஷ் சர்மா தெரிவித்தார்.
அங்கீகாரமற்ற காலனிகள் கூட்டமைப்பு மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் குழு முகேஷ் சர்மாவை அவரது வீட்டில் சனிக்கிழமை சந்தித்தது.
முறைப்படுத்தப்பட்ட காலனிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து கவலை தெரிவித்த அவர்களிரிடம் இந்த உறுதியை முகேஷ் சர்மா அளித்தார். மேலும், பிந்தாபூர் பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில் இது தொடர்பாக முகேஷ் சர்மா மேலும் பேசியதாவது:
“”தலைநகரில் அண்மையில் அங்கீகாரமற்ற 895 காலனிகளை தில்லிப் பிரதேச அரசு முறைப்படுத்தியது. இந்தக் காலனிகளில் தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் இன்னும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை. இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கும்வரை மாநகராட்சிகள் சொத்து வரி வசூலிக்க அனுமதிப்பதில்லை என்று தில்லிப் பிரதேச அரசு முடிவெடுத்திருக்கிறது.
மாநகராட்சிகளை ஆளும் பாஜக-வுக்கு முறைப்படுத்தப்பட்ட காலனிகள் மீது அக்கறை இல்லை. வீட்டு மனை வரைபடத்தை இறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதிலும் மாநகராட்சிகள் அக்கறை செலுத்தவில்லை. தில்லி பிரதேச அரசு வரைபட இறுதிக்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தது. ஆனால், இதை முடித்துக் கொடுப்பதில் மாநகராட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.
எனினும், முறைப்படுத்தப்பட்ட காலனிகளில் தில்லி ஜல போர்டு, பொதுப்பணித் துறை, நீர்ப்பாசன, வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை மூலம் பல்வேறு பணிகளை தில்லி பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது” என்றார் அவர்.