தினமலர் 17.02.2010
முறையாக வரி செலுத்த வேண்டியது அவசியம் மத்திய இணை அமைச்சர் வேண்டுகோள்
ஓசூர்:””வரி செலுத்துவோர் முறையாக வரி செலுத்தினால் மட்டுமே அரசு திட்டங்கள் ஏழைகளுக்கான திட்டங்கள் நிறைவு பெறும்,” என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்தார். ஓசூர் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய வருமானவரித்துறை அலுவலகம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது: நாடு முழுவதும் நிறைய அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. படிபடியாக அவற்றுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வாடகை கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள ஓசூர் அலுவலகத்துக்கும் விரைவில் மூன்று ஏக்கரில் சொந்த அலுவலகம் திறக்கப்படும்.வருமானவரித்துறை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் மிக பெரிய தொகை வருமானம் கிடைத்து வருகிறது. 2008ம் ஆண்டு 2 லட்சத்து 76 ஆயிரத்து 450 கோடி ரூபாயும், 2009ல் 2 லட்சத்து 59 ஆயிரத்து 661 கோடி ரூபாயும், 2010 ஜனவரி வரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 698 கோடி ரூபாயும் அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது.
இந்த நிதியாண்டில் இன்னும் இரு மாதங்கள் உள்ளன. இதனால், கடந்த ஆண்டுகளை காட்டிலும் வருமானவரித்துறை மூலம் அதிகளவு அரசுக்கு அதிகளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, நடப்பாண்டு வருமான வரித்துறையில் 6.59 சதம் கூடுதாலாக வரி வசூலாகி உள்ளது. சென்னையை பொறுத்த வரை 10.47 சதம் கூடுதலாக வரிவசூலாகி உள்ளது. வரி வசூல் மூலமே நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியும். வரி செலுத்துவோர் வரியை ஒழுங்காக செலுத்தினால், ஏழை, எளிய மக்களுக்காக தீட்டப்படும் அரசு திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும். பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தியாவில் முதலீடு செய்தால் முதலீடுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நம்பிக்கை முதலாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றனர். கடன் வழங்கவும் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுவாக சொந்த அரசு அலுவலக கட்டிட திறப்பு விழாக்கள் தான் அமைச்சர்களை அழைத்து விமர்ச்சையாக நடத்தப்படுவது வழக்கம். நேற்று வருமான வரித்துறை வாடகை கட்டிட திறப்பு விழா அமைச்சரை அழைத்து விமர்சையாக திறப்பு விழா நடந்தது. வாடகை கட்டிட திறப்பு விழாவுக்கு அமைச்சரை அழைத்து விமர்ச்சையாக விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
விழா முடியும் முன் சென்ற கலெக்டர் விழா அழைப்பிதழிலில் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், எம்.பி., சுகவனம் பெயர் மற்றும் துறை அதிகாரிகள் பெயர் மட்டும் இடம்பெற்று இருந்தது. கலெக்டர் சண்முகம், உள்ளூர் எம்.எல்.ஏ., கோபிநாத் ஆகியோர் பெயர் இடம்பெறவில்லை. எம்.எல்.ஏ., கோபிநாத் விழாவுக்கு வரவில்லை. கடைசி வரை கலெக்டரை விழாவுக்கு அழைக்க வில்லை. நேற்று காலை அமைச்சரின் கட்டாய அழைப்பின் பேரில் கலெக்டர் சண்முகம் பங்கேற்றார். அவர் விழாவில் பேசும்போது, “”விழாவுக்கு அழைப்பு இல்லை; அழையாத விருந்தாளியாக வந்துள்ளேன். அடுத்த முறை சொந்த கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பார்களோ; இல்லையோ?, அழைத்தால் வருவோம்,” என, விரக்தியுடன் பேசினார். பேசி முடித்தவுடன் உடனடியாக விழா அரங்கை விட்டு கோபத்துடன் வெளியேறினார். இதனால், விழா அரங்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.