தினமலர் 18.02.2010
மூன்று ஆண்டு தூக்கம் கலைந்தது : விழித்தது, நகராட்சி நிர்வாகம்
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக வரி செலுத்தாதவர் களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள 15 வேலம்பாளையம் நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறையால், கடந்த மூன்றாண்டுகளாக வரி செலுத்தாதவர்கள் மீது “கவனம்‘ செலுத்தப்படவில்லை. இதுவரை இவர்களை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம், தற்போது தான் அதுகுறித்து சிந்திக்கவே துவங்கியுள்ளது. நகராட்சியின் மெத்தனத்தால், வார்டு கவுன்சிலர் உட்பட பலரும் வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், வரி வசூலை தீவிரப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப் பட்டது.
இதைத்தொடர்ந்து, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும், பிப்., 15க்குள் செலுத்த வேண்டுமென நகராட்சி செயல் அலுவலர், அறிவிப்பு வெளியிட்டார். வார்டு பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் தினமும் அறிவிப்பு செய்யப்பட்டது. விதிக்கப்பட்ட கெடு முடிந்ததைத் தொடர்ந்து, செலுத்தப்படாத வரியினங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக, நகராட்சியில் உள்ள முதல் ஐந்து வார்டுகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில், ஐந்தாவது வார்டு கவுன்சிலர் கல்யாணி உட்பட 11 பேர் மூன்று ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. இதில் இரண்டு பேரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக் கப்பட்டன. இதையறிந்து, மீதியுள்ள ஒன்பது பேரும் வரியினங்களை அவசரமாகச் சென்று செலுத்தி விட்டனர். நகராட்சியின் அதிர்ச்சி வைத்திய நடவடிக்கையால், ஒரே நாளில் 60 ஆயிரம் ரூபாய் வசூலானது.
நகராட்சி பொறியாளர் மல்லிகை கூறிய தாவது: ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை வீட்டு வரி, தொழில் வரி, நான்கு முறை குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படும். 15 வேலம்பாளையம் நகராட்சி எல்லைக்குள் 2,000க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள், 8,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. வரி செலுத்தாதவர்கள் மீது, இம்மாத கடைசி வாரத் திலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப் படும், என்றார்.