தினமலர் 14.12.2010
மூலிகை பூங்கா விரைவில் திறப்பு: மேயர் தகவல்
சென்னை : “”ஓட்டேரியில் அமைக்கப்பட்டுள்ள, மூலிகை செடி பூங்காவை விரைவில், துணை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்,” என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை ஓட்டேரி குப்பை மாற்று நிலையம் அருகில், 11 ஏக்கர் நிலப்பரப்பில், மாநகராட்சி மூலிகை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், நான்காண்டுகளுக்கு முன், 4,000 மூலிகை செடிகள் நடப்பட்டு, தற்போது நல்ல நிலையில் வளர்ந்துள்ளது. மலை வேம்பு, ஆவாரம், மருதாணி, நொச்சி, சிறியா நங்கை, பெரியா நங்கை, நெல்லி போன்ற பல வகையான மூலிகை செடிகள் நடப்பட்டுள்ளன.இந்த பூங்காவை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை பார்வையிட்டார். அப்போது, பூங்காவிற்குள், நடைபாதை, கழிவறை அமைக்க உத்தரவிட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:
பூங்காவில் 64 அலங்கார விளக்குகள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்கப்படும். 600 மீட்டர் நீளத்திற்கு நடைபாதைகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். மூலிகைகள் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு, இந்த பூங்கா உதவும் வகையில், ஒவ்வொரு செடிக்கும் அருகில் அந்த மூலிகையைப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டிருக்கும்.இரண்டு கோடியே 25 லட்ச ரூபாய் செலவில், மூலிகை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை துணை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளார்.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன், புரசைவாக்கம் எம்.எல்.ஏ., பாபு, மற்றும் கவுன்சிலர்கள் இருந்தனர்.