மெட்ரோ ரயில் நிறுவனம் மீது மாநகராட்சி புகார்
சென்னையில் உள்ள புராதான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் அளிக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி மன்றக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது, துணை மேயர் பா. பெஞ்சமின் கேள்வியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் வழித்தடத்தில் உள்ள புராதான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளதா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த மேயர் சைதை துரைசாமி, புராதான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் வழங்கவேண்டும். ஆனால், இதுவரையில் புராதான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கை அளிக்கப்படவில்லை.
இந்த அறிக்கையை அளிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. எனவே துணை மேயர் கேட்ட கேள்விக்கு அடுத்த மன்றக் கூட்டத்தில் பதில் அளிக்கப்படும் என்றார்.