தினமணி 5.11.2009
மெரீனாவில் கிரிக்கெட் தடை
சென்னை, நவ. 4: குறிப்பிட்ட சில போலீஸ் அதிகாரிகளின் பிடிவாதம் காரணமாகவே மெரீனா கடற்கரை உள்புறச்சாலையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநகரப் போலீஸôரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
மெரீனா கடற்கரை உள்புறச் சாலையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை போலீஸôர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விரட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் கடற்கரை காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வரும் வாரம் முதல் இங்கு யாரும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என போலீஸôர் அறிவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் சென்னை மாநகர காவல் ஆணையாளர், சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்குப் பதிலாக சென்னை மாநகராட்சியின் 228 விளையாட்டுத் திடல்களில் கிரிக்கெட் விளையாடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “”மேதினப் பூங்கா விளையாட்டுத் திடல், கோபாலபுரம் விளையாட்டுத் திடல், டர்ன்புல்ஸ் சாலை திடல், நந்தனம் விரிவாக்கம் திடல், செனாய் நகர் திருவிக பூங்கா திடல், எழும்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம், பட்டினபாக்கம் வீட்டுவசதி வாரிய விளையாட்டுத் திடல் ஆகியவற்றை கிரிக்கெட் விளையாடுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்” என போலீஸ் கமிஷனரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி திடல்கள் 228
“”மாநகராட்சிக்கு சொந்தமான 228 விளையாட்டுத் திடல்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலான திடல்கள் மிகவும் சிறியவை. அதுவும் அந்தந்தப் பகுதியை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதிலும் பல திடல்களில் நெருக்கடி நிலவுவதால், விளையாடும் போது இளைஞர்களுக்குள் மோதல் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் மேலும் சில குழுக்கள் வெளியில் இருந்து இங்கு வந்தால் அது இளைஞர்களுக்குள் மோதலை உருவாக்கி சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்” என ஷெனாய் நகரை சேர்ந்த ராஜன் கூறினார்.
ஹாக்கி அரங்கில் கிரிக்கெட்
மெரீனா கடற்கரைக்கு மாற்றாக எழும்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கை கிரிக்கெட் விளையாட பயன்படுத்திக் கொள்ளலாம் என போலீஸ் கமிஷனர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அரங்கம் ஹாக்கி விளையாட்டுக்கான பிரத்யேக இடமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வெளியில் இருந்து இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க முடியாது என அரங்கத்தின் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி புகார் செய்ததா?
மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களால் அழகுப்படுத்தும் பணிகளுக்கு பாதிப்பு என்று புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
இது விஷயத்தில் மாநகராட்சி தரப்பில் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் குறிப்பிட்ட சில போலீஸ் அதிகாரிகள் தடை விதிப்பதில் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இதனை கெüரவப் பிரச்னையாக எடுத்துக் கொள்ளாமல் நடைமுறை காரணங்களை கருத்தில் கொண்டு தடை உத்தரவை போலீஸôர் திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.