மெரீனாவில் மிதிவண்டி தடம்; இசை நீரூற்று
சென்னை மெரினா கடற்கரையில் மிதிவண்டிகளுக்கென தனியாக தடம் அமைக்கப்படும் என்று 2013-14ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ரிப்பன் கட்டடத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்பு:
வீடுகளில் இருந்து பறக்கும் ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் மிதிவண்டி தடங்கள் அமைப்பது அவசியமாகிறது.
அதன்படி, மெரினா கடற்கரை வழியாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பட்டினப்பாக்கம் வரையில் 7 கி.மீ. நீளத்துக்கு புதிய மிதிவண்டி சுற்றுப் பாதை அமைக்கப்படும்.
இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரையுள்ள தார் சாலை மற்றும் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள தார் சாலை ஆகியவை கடல் சீற்றத்துக்கு உள்ளாகும் நிலையில் உள்ளதால், இவற்றை பாதுகாக்கும் பொருட்டு இந்த சாலைகள் சிமென்ட் கான்கீரிட் சாலையாக மாற்றியமைக்கப்படுகிறது.
கடற்கரைகள் மேம்படுத்தல்:கொட்டிவாக்கம், நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதி வரைமுறைகளுக்கு உட்பட்டு நடைபாதைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் சிறுவர் விளையாட்டுப் பகுதிகளுடன் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மெரினாவில் இசை நீரூற்று: மெரினா கடற்கரையில் புல்வெளி, நடைபாதைகளுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதனை மேலும் அழகுபடுத்தும் வகையில் இசை நீரூற்று அமைக்கப்படும்.