தினகரன் 20.04.2013
மேட்டூர் நகராட்சியில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி
மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது.
மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக 1 வது வார்டு முதல் 9வது வார்டு வரை புகைப்படம் எடுக்கும் பணியை, மேட்டூர் நகர்மன்ற தலைவர் லலிதா சரவணன், நகர்மன்ற ஆணையர் (பொ) சுகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1 மற்றும் 2வது வார்டு பகுதி மக்கள் வைத்தீஸ்வரா மேல்நிலைப்பள்ளியிலும், 3 மற்றும் 4வது வார்டு பொதுமக்கள் தங்கமாபுரி பட்டணத்தில் உள்ள நகராட்சி பள்ளியிலும், 5 மற்றும் 9 வது வார்டு வரை சேலம் கேம்ப் பகுதியில் உள்ள புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியிலும் புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.
நாளை (21ம்தேதி) வரை தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடக்கும் என்று ஆணையாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.