தினகரன் 30.06.2010
மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்போம் திண்டிவனம் நகர்மன்ற தலைவர் உறுதி
திண்டிவனம், ஜூன் 30: திண்டிவனம் மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியவில்லை என்று தினகரன் நாளிதழில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து திண்டிவனம் மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததற்கான காரணம் குறித்தும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் நகர் மன்ற தலைவர் பூபாலன் கூறியதாவது:
திண்டிவனம் மேம்பாலத்தை பராமரிக்கும் பொறுப்பு தேசிய நெடுஞ் சாலையிடம் உள்ளது. விளக்குகள் எரிவது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறைக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளோம். இரண்டு ஆண்டுக்கு முன் சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் சென்றும் பேசியிருக்கிறோம் பயன் இல்லை.
கடந்த நிர்வாகம் நடந்த போதே 2 ஆண்டுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாமல் விட்டதால் விளக்குகளை எரிய விடவில்லை. நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு 250 விளக்குகளில் 100 விளக்குகளை ரூ.2.50 லட்சம் செலவில் எரிய விட்டோம். நாளடைவில் அவைகள் ஒவ்வொன்றாக நின்று விட்டது. இதை உள்ளூர் தொழிலாளர்களை வைத்து சீர் செய்ய முடியாது. ஏணி அதில் ஏறும் ஆட்கள் வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வர வேண்டும். 100 விளக்குகள் எரிய வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு ரூ.2000 மின் கட்டணம் வீதம் என ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். நகராட்சி செலவு செய்ய தயாராக இருந்தாலும், மின்சார துறை மேம்பால விளக்குகளை எரிய ஆட்சேபனை செய்கிறார்கள். காரணம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நகராட்சி நிர்வாகம் மின் துறைக்கு ரூ. 1.50 கோடி பாக்கி வைத்திருக்கிறது. மேல்மருவத்தூரில், அச்சரப்பாக்கத்தில் மேம்பால விளக்குகள் எரிகிறதே அது எப்படி என்றும் கேட்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை துறையினர் டோல் கேட் மூலம் வாகன வசூல் செய்து நெடுஞ்சாலையில் விளக்குகளுக்கு பணம் செலுத்துகிறார்கள். விழுப்புரம் புறவழிச்சாலையோடு அவர்கள் பணி முடிந்து ஜக்காம்பேட்டை புறவழிச்சாலையில் ஆரம்பமாகிறது. திண்டிவனத்துக்கு டோல்கேட் வசூல் கிடை யாது என்பதால் மேம்பால விளக்குகளை பராமரிப்பில் எடுத்து கொள்ளவில்லை. எது இருப்பினும் திண்டிவனம் நகராட்சி மீண்டும் முயற்சி செய்து மேம்பால விளக்குகளை எரிய விடுவோம் என்பதை நகர மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்றார்.